அங்கு தொட்டு இங்கு தொட்டு இன்று முஸ்லிம் பெண்களின் ஹிஜாபில் வந்து நிற்கின்றது பௌத்த மேலாதிக்கத்தின் குரூரத்தனம். இலங்கையின் இன்னொரு தேசிய இனமான சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பெருந்தேசியவாதப் போக்குகள் எல்லாவற்றையும் மௌனமாக எதிர்கொண்டு வந்த நிலையில் இன்னொரு அவலம் இடியாய் வந்து விழுந்திருக்கிறது.
பள்ளிவாசல்களை உடைத்துப் பார்த்தார்கள், மாடறுப்பைத் தடை செய்ய வேண்டுமென்றார்கள், ஹலால் சான்றிதழ் வேண்டாமென்றார்கள், தம்மால் முஸ்லிம்களைக் கிளர்ந்தெழச் செய்ய முடியுமானவற்றையெல்லாம் செய்து பார்த்தார்கள். எனினும் முஸ்லிம்களின் மௌனப் புரட்சி தொடர்ந்த வண்ணமேயிருந்தது. இறுதியாக அவர்கள் தூக்கிப் பிடித்திருக்கும் விடயம் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம். கடைசியில் முஸ்லிம் பெண்களின் மானத்தில் கைவைக்கும் அளவுக்கு வந்திருக்கிறார்கள்.எமது மௌனம் இன்னும் தொடர்கிறது.
நாம் பண்பாடுகளால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். எமது மார்க்கம் பண்பாடுகளுக்கு பெரும் மதிப்பளித்துப் பேசும் மார்க்கமாகக் காணப்படுகிறது. எனவே, வீண் ஆக்ரோஷங்களை வெளிப்படுத்தாது மௌனமாகப் புரட்சி செய்வதே புத்திசாலித்தனமானது. அறிவார்ந்த ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே முன்மாதிரி மிக்க ஒரு சமூகத்தின் இலட்சணமாகும்.
ஹிஜாப் என்பது முஸ்லிம் பெண்கள் தமது தலைமுடியை மறைப்பதற்காக அணிகின்ற கலாசார உடையாகும். அது அவர்களது உரிமையாகக் காணப்படுகின்றது. அதனை அணிய வேண்டுமென்று எந்தவொரு தனி மனிதனும் சட்டம் போடவில்லை. மாறாக, அது இறைவன் விதித்த சட்டமாகக் காணப்படுகின்றது. அது இஸ்லாமிய அகீதாவோடு (நம்பிக்கைக் கோட்பாட்டோடு) சம்மந்தப்பட்ட விடயமாகக் காணப்படுகின்றது. முஸ்லிம் பெண்கள் தமது முகம் மற்றும் கையின் மணிக்கட்டுப் பகுதி தவிர மற்றெல்லா உடற்பாகங்களையும் கட்டாயம் மறைத்தேயாக வேண்டுமென்பது அல்குர்ஆன் கூறும் கட்டளையாகும். இதனைத் தடுக்கும் உரிமை எந்த மனிதனுக்கும் இல்லை.
இதனை பிற்போக்குவாதம் என்றோ அடக்கு முறை என்றோ யாரும் கருதத் தேவையில்லை. அப்படி யாரேனும் கருதினாலும் அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை. யாரேனும் இது பற்றி வினவினால், ‘இது இறை கட்டளை. அதனைப் பின்பற்றுகிறோம்’ என்று தெளிவாகக் கூறுங்கள். இதைச் சொல்ல வெட்கப்பட வேண்டாம். ஏனெனில், ஹிஜாப் என்பது பெண்களைக் கண்ணியப்படுத்துகின்ற ஓர் உடையாகும். வேறு எந்த மதங்களும், சித்தாந்தங்களும், கோட்பாடுகளும் கொடுக்காத கௌரவத்தை, மரியாதையை இஸ்லாம் மார்க்கம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. வேறு எந்த மதங்களும் பேசாத அளவுக்கு பெண்ணுரிமை பற்றி இஸ்லாம் பேசியிருக்கிறது.
இஸ்லாம் ஒருபோதும் பெண்களை அடிமைப்படுத்த விரும்பவில்லை. ஆண்களைப் போலவே தமது விவகாரங்களை சுயமாக மேற்கொள்ளும் சுதந்திரம் கொண்டவர்கள். ஆனால், இஸ்லாம் அவர்களுக்கு சில வரையறைகளை விதித்திருக்கிறது. இது அவர்களைப் பாதுகாப்பதற்காகவேயன்றி தடுப்பதற்கல்ல. ஹிஜாப் கூட இத்தகைய ஒன்றுதான்.
பெண்களின் தலை முடியானது கவர்ச்சிகரமான ஒன்று. அந்நிய ஆண்களைக் கவர்ந்திழுக்கக் கூடியது. இன்று நாம் வீதியில் இறங்கிச் செல்லும் போது இதனைக் கண்கூடாகக் காண்கிறோம். விதவிதமான நிறம் பூசி, விதவிதமாக அலங்கரித்து அடுத்தவர்களது கவனத்தை தம்பால் ஈர்க்கின்ற விதமாகத் தமது தலை முடிகளை அலங்கரித்துச் செல்கின்ற பெண்களைத் தினம் தினம் காண்கிறோம்.
கணவன் மட்டுமே காண வேண்டிய அழகை வீதியில் போவோர் வருவோரிடமெல்லாம் காட்ட வேண்டிய தேவை ஒரு பெண்ணுக்கு ஏன் என்ற கேள்வி நமக்குள் இயல்பாகவே ஏற்படுகிறதல்லவா? இஸ்லாம், பெண்கள் தம்மை அலங்கரிப்பதைத் தடுக்கவில்லை. ஆனால், அலங்கரித்து, உங்களுக்கு மட்டுமே சொந்தமான உங்களது கணவன்மாரிடம் மட்டும் காட்டுங்கள் என்று அழகிய பண்பாட்டைக் கற்றுத் தருகிறது. மாறாக, வீதியில் போகின்ற எல்லோரிடமும் அலங்கரித்துக் காட்ட நினைத்தால் வீதியில் போகும் எல்லோருமே குறித்த அப்பெண்ணுடன் வாழ நினைப்பார்கள். இது அடுத்த ஆண்களை விபச்சாரத்திற்குத் தூண்டுகிறது. குறித்த பெண்ணின் கற்புக்கும் ஆபத்தாக அமைகிறது.
எனவே, இந்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கான முன்னேற்பாடாகத்தான் இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாபைக் கடமையாக்கியிருக்கிறது. இது அவர்களது தலைமுடிக்கு மட்டுமல்ல. ஏனைய உடற்பாகங்களுக்கும் மிகப்பொருத்தமானதொன்றாகக் காணப்படுகிறது. பெண்கள் இயல்பிலேயே கவர்ச்சியானவர்கள். ஆண்கள் பெண்களின் கவர்ச்சியில் மயங்கக் கூடியவர்கள். எனவே, இதனைக் கட்டுப்படுத்தவே அவர்கள் தங்களை மறைத்துக் கொள்ளக் கூடிய ஆடையை அணிய வேண்டுமென்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. ஹிஜாப் என்பது முஸ்லிம் பெண்களுக்கான உடை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்குமான பாதுகாப்புத் திரை என்பதை நாம் மனம்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் அண்மையில் பௌத்த மதகுரு ஒருவர் வெளியிட்டிருந்த, முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் களையப்பட வேண்டுமென்றிருந்த கருத்து அனைத்து முஸ்லிம்களையும் கவலையடையச் செய்துள்ளது. அரை நிர்வாணிகளாகவும், முக்கால் நிர்வாணிகளாகவும் பொது இடங்களிலும், ஊடகங்களிலும் அலைந்து திரியும் தனது மத சகோதரிகளுக்கு இஸ்லாத்தின் அழகிய ஆடைக் கலாசாரத்தை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு முஸ்லிம் பெண்களின் ஹிஜாபைக் களைய முனைவதன் பின்னனிதான் என்ன?
சாதாரண ஒரு சிங்களப் பொதுமகன் இக்கருத்தை சொல்லியிருந்தாலே பாரதூரமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒரு நிலையில் பௌத்த மதகுரு சொல்லியிருப்பது வியப்பளிக்கிறது. அதுவும், காமம், இச்சை, ஆசாபாசங்களைத் துறந்து வாழ்கின்ற ஒரு துறவி இக்கருத்தை முன்வைப்பதன் நோக்கம் என்ன? தமது இச்சைகளை அடக்குவதற்கு ஹிஜாப் ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லையே. பிறகு ஏன் இப்படியான கருத்தை முன்வைக்க வேண்டும். முஸ்லிம்களை எப்படியாவது அடக்கியாக வேண்டுமென்ற பௌத்த தீவிர வாதத்தின் வெறியா அல்லது இன்னொரு மியன்மாரைக் கட்டமைப்பதற்கான ஏற்பாடா என்பது எமக்கு விளங்கவில்லை.
தற்போது இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக நடந்து கொண்டிருக்கின்ற அநியாயங்களைப் பார்க்கின்ற போது தமிழர்கள் படும் அவலங்களைப் பார்த்து வைரமுத்து எழுதிய கவிதை வரிகள்தான் தவிர்க்க முடியாமல் ஞாபகம் வருகிறது. ‘வேஷ்டி பற்றிய கனவுகளில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவு போனது’ என்கிறார்.
இந்த நாட்டிலே சிறுபான்மை முஸ்லிம்களுக்கென்றிருந்த கொஞ்ச நஞ்ச மத உரிமைகளையும் பிடுங்கி விட்டு இங்கே எதனை சாதிக்க நினைக்கிறார்கள். ஏலவே குறிப்பிட்டது போல இங்கிருக்கின்ற முஸ்லிம்களை அநியாயமாக அழித்துவிட்டு இன்னொரு மியன்மாரைக் கட்டியெழுப்ப முயல்கிறார்களா என்ற கேள்வி எம்முள் எழுகிறது. ஏனெனில் இலங்கையில் முஸ்லிமாயிருத்தல் என்பது அச்சத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகின்ற ஒரு அவலமான சூழல் தோன்றியுள்ளது.
சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு என்றெல்லாம் பேசும் முஸ்லிம்களின் கனவுகளுக்கெல்லாம் வேட்டு வைத்துவிட்டு இந்நாட்டில் சமாதானம் உருவாகி விட்டது, எல்லா மக்களும் நிம்மதியாக, சமத்துவமாக வாழ்கிறார்கள் என்றால் அது எந்த வகையில் நியாயம்.
ஒரு சில பௌத்த தீவிரவாத அமைப்புகளால் நாட்டின் அமைதிக்கும் இறைமைக்கும் குந்தகம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, அரசு தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஒரு சில சக்திகளது சுயநல அரசியல் நோக்கங்களுக்காக இந்த நாட்டின் இன்னொரு தேசிய இனம் தாக்கப்படுவதையும், அடக்கப்படவதையும் மனிதாபிமானமுள்ள எவராலும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்தவும் முடியாது.
ஹிஜாப் என்பது மானத்தை மறைக்கின்ற ஒரு திரை மட்டுமே. அது மறைத்தலின் அழகையும், அழகினை மறைத்தலையும் தத்துவார்த்தமாக எடுத்தியம்புகின்ற ஆடையாகும். அந்த யதார்த்தத்தை உணர்ந்து ஹிஜாபைப் பேணுகின்றவர்களாக எமது முஸ்லிம் பெண்கள் மாற வேண்டும்.
அது தீவிரவாதத்தினதோ, அடக்கு முறையினதோ அடையாளமல்ல என்பதை எல்லாத் தரப்பினரும் உணர வேண்டும். அடுத்தவர்களது கலாசாரம், பண்பாட்டு விழுமியங்கள் மதிக்கப்பட வேண்டும். வீணான சந்தேகங்களையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதை விடுத்து இந்நாட்டின் அபிவிருத்திக்காக இன, மத, மொழி பேதம் களைந்து எல்லாத் தரப்பினரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். எல்லா இன மக்களும், நாம் இந்த இலங்கைத் திருநாட்டின் புதல்வர்கள். நாம் இந்நாட்டின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து செயலாற்ற முன்வர வேண்டும்.
முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்படுகின்ற எல்லாத் தீய நடவடிக்கைகளும் தவிடுபொடியாக வேண்டுமென்று நாமனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட மிகப் பொருத்தமான மாதம் இதுவென்பதை நினைவிற் கொள்வோம்.
விடிவெள்ளி
No comments:
Post a Comment