(Tn) எகிப்து தலைநகர் கெய்ரோவில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சி ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் பிரதான பாதைகளை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, அவர்களை கலைக்க பாதுகாப்பு பிரிவினர் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஏற்பட்ட மோதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்து பாதுகாப்பு பிரிவினர் மீது தாக்குதல் நடத்தினர்.
எகிப்தில் இடம்பெற்ற இராணுவ சதிப் புரட்சிக்கு பின்னர் அங்கு சென்ற அமெரிக்காவின் உயர்மட்ட தூதுவர், எகிப்தில் ஜனநாயகத்தை தோற்றுவிக்க இரண்டாவது வாய்ப்பு கிடைத்திருப்பதாக அறிவித்த நிலையிலேயே இந்த மோதல்கள் வெடித்துள்ளன.
எகிப்து சென்ற அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் வில்லியம் பேர்ன்ஸ், இராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசின் தலைமைகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உட்பட முக்கியமான தரப்புகள் அவரை சந்திப்பதை புறக்கணித்தன.
கெய்ரோவில் முர்சி தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் பாதுகாப்பு பிரிவின் தலைமையகக் கட்டடத்திற்கு முன்னால் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50க்கும் அதிகமான முர்சி ஆதரவாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்று ஒருவாரம் கழிந்த நிலையிலேயே தற்போது மோதல் வெடித்துள்ளது.
கடந்த ஜூலை 3 ஆம் திகதி இராணுவ சதிப்புரட்சி மூலம் ஜனாதிபதி முர்சி பதவி கவிழ்க்கப்பட்டார்.
ஆத்திரமடைந்த நூற்றுக் கணக்கான முர்சி ஆதரவாளர்கள் கெய்ரோவின் பிரபலமான ஒக்டோபர் 6 பாலத்தை இடைமறித்ததை அடுத்து, கடந்த திங்கட்கிழமை மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. எனினும் பின்னர் இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எவரும் காயமடைந் ததாக செய்தி வெளியாகவில்லை.
முன்னதாக முர்சி ஆதரவாளர்கள் முகாமிட்டிருக்கும் ரபா அல் அதவியா பள்ளிவாசலுக்கு வெளியிலும் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. முர்சியின் அதிகாரத்தை மீள வழங்குமாறு கோரி இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘சிசி வெளியேறு’ என கோஷம் எழுப்பப்பட்டது. எகிப்து இராணுவ தளபதி ஜெனரல் அப்தல் பத்தாஹ் அல் சிசிக்கு எதிராகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் இவ்வாறு கோஷம் எழுப்பினர்.
இதில் கடந்த ஒரு வாரமாக அமைதி நிலவிய எகிப்து நூதனசாலைக்கு அருகிலும் மீண்டும் பதற்றம் நிலவியது. கண்ணீர் புகையிலிருந்து பாதுகாக்க தனது முகத்தை துணியால் மூடிக்கொண்ட இளைஞர்கள் முர்சி ஆதரவு மற்றும் இராணுவ எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு பொலிஸார் மீது கல் வீசி தாக்குதல் நடத்துவது காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருக்கும் அல் ஜkரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கலவரம் இடம்பெற்ற பகுதிகளில் ஹெலிகொப்டர்கள் பறந்தவண்ணமும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிந்தவண்ணமும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திங்கள் மாலை முதல் நேற்று காலை வரை இடம்பெற்ற வன்முறைகளில் 7 பேர் பலியாகியுள்ளதோடு, 261 பேர் காயமடைந்திருப்பதாக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். மறுபுறத்தில் அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் பேர்ன்ஸ், இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூர் மற்றும் பிரதமர் ஹஸம் அல் பப்லாவி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் அல் சிசி ஆகியோரை சந்தித்து பேசினார். இதில் கடந்த இரண்டு வாரமாக நிலவும் பதற்ற சூழலை, மக்கள் எழுச்சியின் வாக்குறுதியை உணர்வதற்கான இரண்டாவது வாய்ப்பாக விபரித்துள்ளார்.
அரசியல் நோக்கம் கொண்ட கைது நடவடிக்கைகளை நிறுத்துமாறு இராணுவத்தை கோரிய அமெரிக்க சிரேஷ்ட தூதுவர், எகிப்தில் ஸ்திரத்தன்மை, ஜனநாயகம், சகிப்புத்தன்மையை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைக்கும் என வாக்குறுதி அளித்தார்.
எனினும் தாம் இங்கு வந்தது எவருக்கும் பாடம் நடத்த அல்ல என்றும் எமது திட்டங்களை இங்கு நடைமுறைப் படுத்த முயற்சிக்கவில்லை என்றும் பேர்ன்ஸ் சுட்டிக்காட்டினார். எனினும் எகிப்துக்கு ஆண்டுதோறும் 1.5 பில்லியன் நிதி உதவி வழங்கும் அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து எகிப்தின் பெரும்பாலானோருக்குத் அதிருப்தி நிலவுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். பேர்ன்ஸின் இரண்டு நாள் விஜயத்தில் பல தரப்புகளையும் சந்திக்க திட்டமிட்டிருந்தபோதும், சலபிக்கலின் அல் நூர் கட்சி மற்றும் முர்சி எதிர்ப்பாளர்களின் டமரொட் முன்னணி ஆகியன அவருடனான பேச்சுவார்த்தையை புறக்கணித்துள்ளன.
அதேபோன்று அவரை சந்திக்க எந்த திட்டமும் இல்லை என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு கூறியுள்ளது. இராணுவத்தால் தடுத்துவைக்கப்பட் டிருக்கும் முர்சியை விடுவிக்கும்படி அமெரிக்கா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது.
No comments:
Post a Comment