(நாகூர் ழரீஃப்)
'ஒரு முஸ்லிம் இரு தடவைகள் ஒரே குழியினில் விழமாட்டான்' என்பது ஒரு நபி மொழியின் கருத்து.
முஸ்லிம் என்பவன் எப்போதும் விழப்புடனும் நிதானத்துடனும் இருக்க வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். அதாவது ஒருவரால் அல்லது ஒரு சமூகத்தால் முஸ்லிம்கள் பல தடவைகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட மாட்டார்கள். அவ்வாறு ஏமாற்றப்படுபவர்களது ஈமானிய நிலை கவணிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகும் என்ற கருத்தும் மேற்படி நபி மொழியில் உணர்த்தப்படுகின்றது.
அந்த அடிப்படையில் முஸ்லிம்கள் சென்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் போது முஸ்லிம் அரசியல்வாதிகளால் முழுமையாகவே ஏமாற்றப்பட்டனர். பசப்பு வார்த்தைகளையும் வீரப் பேருரைகளையும் கேட்டு நம்பி அசந்து போயினர்.
தம்புள்ள மஸ்ஜிதுல் கைரிய்யாவின் தாக்குதலும் சேதமும் நம்முடைய சமூக மற்றும் சமயப் பற்றற்ற அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குப் பிச்சைகளுக்கான ஒரு அதிஷ்டமாக அமைந்து விட்டது. ஆளும் தரப்பும் அதையே பயன்படுத்தியது எதிர்த் தரப்பும் அதே தாளத்தையே கொட்டியது. இறுதியில் ஒரு வருடம் தாண்டிய நிலையில் அப்பள்ளி வாசல் அநாதரவான நிலையில் தவித்து நிற்கின்றது.
இத்தகைய சந்தர்ப்பத்தில் அப்பள்ளிவாசல் பற்றி தொண்டை கிழியக் கத்தியவர்கள் அவரவர் தேவைகளையும் இலக்கையும் அடைந்து கொண்டதுடன் ஓய்வெடுத்துக் கொண்டனர். அப்பாதையால் செல்லும் போது கூட அப்பக்கம் திரும்பிப் பார்க்கவும் அவர்களுக்கு நேரமில்லை.
இதற்கிடையில் மற்றும் ஒரு மாகாண சபைத் தேர்தலை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்குகின்றனர். ஒவ்வொரு கட்சியும் தமக்கு சாதகமன அல்லது வாக்குப் பிச்சைக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துள்ளதுடன் தீவிரமாகச் செயற்பட்டும் வருகின்றனர். சமூக மட்டத்திலும் மக்கள் மன்றத்திலும் அங்கீகாரம் பெற்ற பலரையும் தேர்தல் களத்தில் தள்ளிவிடத் தீர்மாணித்தும் உள்ளனர். பல புத்திஜீவிகள் விலைபோயுள்ளனர்.
இவர்களால் எதையாவது சாதிக்கமுடியுமா? அல்லது பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாகப் போகின்றதா? வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள் இது பற்றி ஒன்றுக்கு பல தடவைகள் சிந்தித்தே முடிவுக்கு வரவேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளினால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் அநாகரிகமான மற்றும் மனித நேயமோ மதங்களின் அணுகூலமோ பெறப்படாத செற்பாடுகளை தட்டிக் கேட்கவும் தைரியமாக தடுத்த நிறுத்தவும் விருப்பமில்லாத நிலையிலேயே ஆளும் அரசின் நிலைப்பாடு காணப்படுகின்றது.
அரச தரப்பின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள், எங்காவது ஒரு முஸ்லிம் அரசியல்வாதியைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டும் போது, அவர்களுடன் ஏதாவது கதைக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கூறிவிடுகின்றனர். அவ்வளவுதான் அதனை ஒரு தெய்வ வார்த்தையாக மதித்து ஊடகங்கள் ஊடாக அதைப் பரப்பி விடுவதுடன், அதிலும் தமது சுயநலத்தையே முஸ்லிம் அரசியல்வாதிகள் அடைய முயற்சிக்கின்றனர்.
அதனிடையே சென்ற 11-07-2013 அன்று மஹியங்கணை நகரில் அமைந்துள்ள அரஃபா ஜும்ஆ மஸ்ஜித் இனந்தெரியாதவர்கள் என்று சொல்லப்படக் கூடிய தயார் செய்யப்பட்ட ஒரு காடையர்கள் குழுவினால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டது. அச்செய்தி அறிந்த சர்வதேசத்தில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகம் மீளாத் துக்கத்தில் வீழ்ந்திருக்கின்றது.
இச்செய்தியையும் அணுதாபத்தையும் பயன்படுத்தி இப்போழுது நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரங்களில் மேடைகள் சரியப் பேசவருவார்கள். தொண்டை வற்றக் கத்துவார்கள். இவற்றையும் நம்பி மீண்டும் எமது சமயத்துக்கும் சமூகத்துக்கும் பயனற்றவர்களுக்கு வாக்களிக்கப் போகின்றீர்களா? அல்லது இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகளுக்குப் பாடம் புகட்டப் போகின்றீர்களா?
பொதுவாக முழு தேசத்திலும் குறிப்பாக வடக்கிலும் முஸ்லிம்களின் இருப்புக்களுக்கு உத்தரவாதமளிக்காத எமது பெருந்தலைவர்கள் உங்களை நாடி வாக்குப்பிச்சை கேட்டு வருவார்கள். அப்போது மீண்டும் நீங்கள் ஏமாற்றப்படாமல், சிந்தித்து செயற்படுவது உங்களது இறைவிசுவாசத்தின் அடையாளச் சின்னமாகும்.
வாக்களிப்பது எமது உரிமை என்பது போன்றே, சிந்தித்து வாக்களிப்பது எமது கடமையாகும் என்பதையும் மறந்து விடாதீர்கள். சமூகத்தையும் சமயத்தையும் பாதுகாக்கும் கேடயமாக உங்கள் வாக்குகளைப் பயன்படுத்துங்கள். பசப்பு அரசியல்வாதிகளின் பின்னால் மீண்டும் மீண்டும் சென்று உங்கள் சமூகத்ததை அழிவில் தள்ளிவிடாதீர்கள்.
No comments:
Post a Comment